நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாமக இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் பாமக துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாமக மாநில துணை தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாமகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
திராவிட அரசியலுக்கு மாற்று என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சொன்னதை நம்பி கட்சியில் இணைந்ததாகவும், திராவிட கட்சிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற அன்புமணி ராமதாசால் முடியுமென நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
மாற்று என நம்பிய அன்புமணி ராமதாஸ், கூட்டணி அமைத்து ஏமாற்றம் அளித்ததாகவும், அதிமுக மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமை கடுமையாக விமர்சித்து விட்டு கூட்டணி அமைத்தது அதிர்ச்சியளித்ததாகவும் அவர் கூறினார். கூட்டணி அமைக்க பாமக பேரம் நடத்தியதாகவும், அதிமுக - பாமக கூட்டணி பேரக் கூட்டணி எனவும் கூறிய அவர், இக்கூட்டணியை மக்கள் காரி துப்புகிறார்கள் என தெரிவித்தார்.
ராமதாஸ் தன் மகன் வென்றால் போதுமென நினைக்கிறார் என்று கூறிய அவர், மற்றவர்கள் ஜெயிப்பதை பற்றி அவருக்கு கவலையில்லை என தெரிவித்தார். எஸ்ஆர்எம் உரிமையாளர் பாரிவேந்தரை மிரட்டி பாமக பணம் பெற்றுள்ளதாகவும், பாமகவில் இணைந்ததை வரலாற்று பிழையாக கருதி வெளியேறுகிறேன் எனவும் பொங்கலூர் இரா.மணிகண்டன் தெரிவித்தார்.