கோயம்புத்தூர்: சிவானந்தா காலனி கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி நடராஜன் (66). இவர், நான்கு சக்கர தள்ளுவண்டியில் அப்பகுதியிலுள்ள ரயில்வே பாலத்தின்கீழ் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திமுக கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில், நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் குபேரசம்பத்தை அடித்து உதைத்தனர். இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர், உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்தக் கார் ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமானது என்பதும், சர்வீஸ் விடுவதற்காக ஓட்டுநர் காரை எடுத்துச் சென்றபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது.
இதனிடையே இது குறித்த தகவலறிந்து அங்கு வந்த கோவை வடக்குத் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, சாலையை மறைக்க வேண்டாம் எனவும் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறும் கூறி அனுப்பிவைத்தார்.
இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய காரைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மகன் இறப்பில் சந்தேகம்: மருமகளைக் கைது செய்யக்கோரி போராடிய தந்தை