கோவை கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது கடந்த 5ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநகர காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சரவணம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது அவர்களை பிடித்து காவல் துறை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்கள் வந்த வாகனத்தை சிறை பிடித்து சோதனை மேற்கொண்டதில் பள்ளிவாசல் குண்டு வீச்சு சம்பவத்தில் சந்தேகம் எழுந்தது.
எனவே இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் பாண்டி(41), அகிலன்(23) என்பதும் இருவரும் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் தாங்கள்தான் பள்ளிவாசல் மீது குண்டு வீசினோம் என்பதை ஒப்புக்கொண்டனர். இதில் அகிலன் இந்து பரிசத் அமைப்பின் உறுப்பினர் என்பதும், பாண்டி பாஜக உறுப்பினர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கொரோனா; 4,000 உயிர்கள் பலி