கோயம்புத்தூர் காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் மீது நேற்றிரவு (செப் 22) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்துள்ளது.
அதேநேரம் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. அதேபோல் ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான துணிக்கடை ஒன்று உள்ளது. இதன் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
மேலும் கோவை இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன். பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவரான இவர், காந்திபுரம் நூறடி சாலையில் வெல்டிங் பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று (செப் 23) காலை அவரது மகன் மகேந்திரன் வழக்கம்போல கடையை திறக்க வந்துள்ளார்.
அப்போது கடையின் முன்பாக கண்ணாடிகள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும் கடையின் ஷட்டர் மீது பெட்ரோல் துளிகள் சிந்தி இருந்துள்ளது. இதனையடுத்து அக்கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக இது குறித்து மோகன் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அவ்வாறு கிடைத்த தகவலின் பேரில், ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஏற்கனவே இரண்டு முறை தனது கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து இருப்பதாகவும், ஆனால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இச்சம்பவம் நடந்திருப்பதாகவும் மோகன் தெரிவித்துள்ளார். சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு!