கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்ஸ் வைலட் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்தர். நேற்று முன்தினம் (ஆக.11) இரவு 11 மணியளவில் அவர் வீட்டில் வளர்த்து வரும் நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
நீண்ட நேரமாக நாய் குரைத்துக் கொண்டு இருந்ததால் சுரேந்தரின் தாயார் கதவைத் திறந்து வெளிய வந்து பார்த்துள்ளார். அப்போது காலுக்கு அடியில் நான்கு அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று, அவரைக் கடந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அடியில் சென்றுள்ளது.
காவல் பைரவன்...
தொடர்ந்து, அந்தப் பாம்பின் வாலை நாய் பிடித்து இழுத்துள்ளது. அப்போது பாம்பு நாயின் கண் மற்றம் காது பகுதியில் கொத்தியுள்ளது. இதில் வலியால் துடித்த அந்த நாய் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
உடனடியாக சுரேந்தர் பாம்புகள் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் அவர் வீட்டின் மாடிப் படிகளுக்கு இடையே புகுந்திருந்த பாம்பைப் பிடித்து அதனை வனப்பகுதிக்குள் விட எடுத்துச் சென்றார்.
பிடிபட்ட பாம்பு கண்ணாடி வீரியன் வகையைச் சேர்ந்தது என்றும், இது அதிக விஷம் கொண்ட பாம்பு என்பதும் தொடர்ந்து தெரியவந்தது. நல்வாய்ப்பாக வீட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்ற போதும் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர்களின் நாய் இறந்தது சுரேந்தர் வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பேருந்தில் மடிக்கணினி திருட்டு - காணொலி வைரல்