கோவை: ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தமிழ்நாடு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடையில்லை எனவும் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும், அயலகத் தமிழர் நலவாரியத் தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளித்திருப்பது மகிழ்ச்சியும், பெருமிதத்தையும் தருகிறது. 2006ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு பிரச்னை இன்று (மே 18) முடிவுக்கு வந்திருப்பது நிம்மதியைத் தருகிறது. எதற்காக, ஜல்லிக்கட்டு நடத்த இப்படி போராட்டம் நடத்துகிறார்கள் என சிலர் மத்தியில் கேள்வி எழலாம்.
சிந்துவெளி - ஹரப்பா கலாசாரத்துக்கும், தமிழர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது. அந்த தொடர்பு தான் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல். கீழடி அகழாய்வின் போது பாரம்பரிய காளைகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் கீழடி நாகரித்துக்கும் இடையேயான தொடர்பின் எச்சம் தான் ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2017ம் ஆண்டு பெரும் புரட்சி வெடித்தது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சி வந்த பிறகு, ஜல்லிக்கட்டு தொடர்பான தரவுகளை சேரிக்க தனிக்குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார். அந்த குழுவினர் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில்தான், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு காளைகளை அடக்குவார்கள். ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து இப்போட்டியை நடத்த வழிவகை செய்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் கடந்தாண்டு நவம்பர் 23ம் தேதி முதல் நடைபெற்றது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தத் தடை இல்லை. தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளன. ஜல்லிக்கட்டை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு, நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்" எனக் கூறினர்.
இதையும் படிங்க: Result: 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!