சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது, குழந்தைகள் வெளியே விளையாடக்கூடாது, சூரிய கிரகணம் முடியும் வரை உணவருந்தக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வருகின்றன. இந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் எதிர்க்கின்ற வகையில் சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில், குழந்தைகள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காலை உணவு அருந்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், "அறிவியல் ஆராய்ச்சிகள் பல முன்னேற்றமடைந்த நிலையில், மக்களிடையே இன்றும் பல மூடநம்பிக்கைகள் புதைந்துள்ளன. அறிவியல் ஆய்வின்படி இன்று நடைபெறும் சூரிய கிரகணம் ஒரு அரிய நிகழ்வு. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது இந்த சூரிய கிரகணமானது மிகவும் வியக்கத்தக்க ஒன்றே. ஆனால், சில மதவாதிகள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே பரப்பி இந்த சூரிய கிரகணத்தை ஒரு தீய நிகழ்வாக சித்தரித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. அதை மீறி வெளியே வந்தால் குழந்தைக்கு ஆபத்து, குழந்தைகள் யாரும் வெளியில் விளையாடக்கூடாது கிரகணம் முடியும் வரை உணவருந்தக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே பரவி இருக்கின்றன. இதையெல்லாம் தடுக்கின்ற வகையில் இன்று சூரிய கிரகணம் நிகழும் தருவாயில் உணவருந்தி மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்றோம்" என்றார்.
இதையும் படிங்க: 'அரசியல் சாசனத்தை மாற்றி மனுதர்மத்தை அமல்படுத்த பாஜக திட்டம்!'