கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்திற்கு சென்றார். அவருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு இனிப்புகள் வழங்கி விடுதலையை கொண்டாடினர். இந்நிகழ்வில் அவரது தாயார் அற்புதம்மாளும் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதை விட மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் என்று தான் கூறவேண்டும்.
அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளோம். இதனை அமைதி போராட்டம் என்று தான் கூற வேண்டும். பேரறிவாளன் சட்டத்தின் மூலம் விடுதலை ஆகியுள்ளார். நாம் அனைவரும் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
அதேபோல் இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் போராடுவோம் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய பேரறிவாளன், எனது விடுதலைக்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக தேனீக்கள் தினம் - கோவை ஆட்சியரகத்தில் நடந்த கண்காட்சி!