கோயம்புத்தூர்: உக்கடம் அடுத்த ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம், கடந்த 3 நாட்களாக கார் ஒன்று நின்று கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள், பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்து காவல்துறை அதிகாரிகள் காரை சோதனை செய்தனர்.
சோதனையில், அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும், காரின் சில பகுதிகளில் ரத்தக்கரை இருந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டதில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மனைவி தீபா என்பவர், கடந்த 17ஆம் தேதி காணாமல் போனதும், அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வெங்கடேஷ் என்பவரும் அதே நாளில் காணாமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி.. கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!
அதனை அடுத்து, இரு குடும்பத்தினரும் அளித்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட போலீசார் தீபா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன தீபாவின் கணவர் பாலமுருகனுக்குச் சொந்தமான கார், கோவையில் இருப்பது குறித்து பெரம்பலூர் வி.களத்தூர் போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் கோவை விரைந்த, பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் மோப்ப நாய்கள் மூலம் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்து காணாமல் போன ஆசிரியை தீபாவின் தாலி செயின், கொலுசு, ஏடிஎம் கார்டு போன்ற மற்றும் ஆசிரியர் வெங்கடேசனின் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பெரம்பலூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (டிச.1) மாலை அந்த காரை எடுத்துச் செல்ல பெரம்பலூர் போலீசார் முடிவெடுத்த நிலையில், காரை இயக்குவதற்காக புதிதாக சாவியைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காணாமல் போன ஆசிரியை தீபா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா வசதிகள் என்னென்ன? பார்க்கலாமா..