கரோனா நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளிகளுக்கு இன்று டோக்கன் வழங்குவதாக அதிமுகவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரத்தினபுரி பள்ளியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பொதுமக்கள் தங்களுக்கு டோக்கன் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் முண்டியடித்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. தினமும் 100 பேருக்கு டோக்கன் வழங்கப்படும், ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து பயனாளிகளுக்கும் நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்கும், பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
சமூக விலகல் குறித்து தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், நிவாரண உதவிகளை பெற மக்கள் முண்டியடித்து வந்ததை கண்காணிக்க வேண்டிய அலுவலர்கள் முறையாக கண்காணிக்காமல் அலட்சியமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வணிக வளாகத்தில் பணியாற்றிய இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதி!