கோயம்புத்தூர்: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சியின் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிலையத்தில் முறையாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை எனவும், இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
பொதுவாக, மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு அதிகபட்சம் ஒரு மனுவிற்கு மூன்று அல்லது ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் தங்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனக் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
அதன் பின்னர், காவல் துறையினரின் சமரச பேச்சு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மனு அளிப்பதற்குச் சென்றனர். இதனிடையே மனு அளிக்க வந்த பெண்கள் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளைக் கையில் ஏந்தியபடி, கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், குப்பைகள் அகற்றப்படாததாலும் குழந்தைகள் முதியவர்களுக்கு ஏற்படும் நோய்கள், உடல் உபாதைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: கனிமங்கள் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பு; “மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது” - துரை வைகோ குற்றச்சாட்டு!
இது குறித்து பேட்டி அளித்த அப்பகுதி மக்கள், குப்பைகளை எடுத்து வரும் வாகனங்களுக்கு கூட அப்பகுதியில் சாலை வசதி இல்லை எனவும், அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் அதற்கான இணைப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், தங்கள் பகுதிகளில் குடி தண்ணீர் மாசடைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் அப்ப பகுதியில் தெரு நாய்கள் தொலையும் அதிகரித்து வருவதாகவும், அதனால் குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்த போதிலும், தற்பொழுது வரை எந்த ஒரு மாநகராட்சி அதிகாரியும், அப்பகுதியை பார்வையிட வரவில்லை என வேதனை தெரிவித்தனர். மாநகராட்சிக்கு அனைத்து வரிகளை கட்டியும், தங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் கோவை மாநகராட்சி நிர்வாகம் தருவதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர், கோவை அன்பு நகர் வாழ் மக்கள்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் பயிற்சி விமானம் விபத்து..! விமானிகள் இருவர் பலி; ராஜ்நாத் சிங் இரங்கல்!