கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவரது வீட்டின் முன்பு நேற்று (ஜன.16) 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கஞ்சா போதையில் அமர்ந்தார். அந்த நபரை விசாரித்த காளிராஜ், தனது வீட்டின் முன்பு அமரக் கூடாது, வேறு பகுதிக்கு செல்லுமாறு கூறினார்.
கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர், காளிராஜை தாக்க முயன்றார். பின்னர், வீட்டிற்குள் நுழைந்து பெண்களை தடியாலும், கற்களாலும் தாக்கினார். மேலும், அங்கிருந்த அம்மிகல்லை தூக்கி பெண்கள் மீது எறிந்தார். தடியை கொண்டு தாக்கியதில் காளிராஜின் மனைவி கல்பனாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பக்கத்திலிருந்த தமிழ்மணி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர், தமிழ்மணியின் மனைவி சீதா என்பவரையும் தாக்கினார். பெண்களின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்த பொதுமக்கள், கஞ்சா போதையில் இருந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியதுடன் அருகிலிருந்த மின்கம்பத்தில் கட்டிபோட்டனர். மேலும், காயமடைந்த இரு பெண்களையும் மீட்ட அவர்கள் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்கம்பத்தில் கட்டபட்ட நபரிடம் பொது மக்கள் விசாரித்தபோது பதில் சொல்லமுடியாமல் போதையில் இருந்தார். அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அவரை கருமத்தம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கருமத்தம்பட்டி பகுதியில் தற்போது அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில் அருகே கஞ்சா விற்ற இரு இளைஞர்களை ஊர் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற பெண் மீது தாக்குதல்...!