கோயம்புத்தூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இன்று (டிச.13) காலை தமிழ்நாடு சட்டசபையின் சபாநாயகர் அப்பாவு கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்தார்.
தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் வைத்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என இரு இடங்களில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
வெள்ள நிவராணப் பணிகளை பொதுமக்கள் பாராட்டி இருக்கின்றனர். அதேபோல், மத்திய குழு தமிழகத்திற்கு வருகை புரிந்து, தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி உள்ளனர். குறை சொல்வது பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றியதை கொச்சைப்படுத்துவது போன்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உதவிகளை முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் செய்து தந்துள்ளனர். மத்திய நிதி அமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரிடம் சொல்லி சீக்கிரம் நிவாரண நிதி வாங்கி கொடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் கட்டிப்பிடித்து உருண்ட மாணவர்கள்!