கோயம்புத்தூர்: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியன்று அதிகாலையில் மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், உக்கடம் ஜி.எம் நகரை சார்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், ISIS தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில், மேலும் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை நடத்தி வந்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேசா முபின் ஐஎஸ் (ISIS) இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்ஐஏ (NIA) தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்டமாக முகமது ஆசாருதீன், முகமது தல்கா, பெரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அப்சர்கான் ஆகிய 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் இவ்வழக்கில் மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ் கான், முகமது தௌபீக், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவருக்கு, இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர், இத்ரீஸை சென்னைக்கு அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். முதற் கட்ட விசாரணையில், கார் வெடிப்பு தாக்குதலை நடத்திய ஜமீஷா முபினின் நெருங்கிய நண்பர் முகமது இத்ரீஸ் என்பதும், கூட்டு சதியில் இவருக்கும் தொடர்பு இருப்பதும், கைதான நபர்களிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் முகமது இத்ரீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முகமது இத்ரிஸ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருந்துள்ளார். மேலும் முகமது இத்ரீஸ் செல்போனில் இருந்து கடந்த மூன்றாண்டுகளில் அவர் மேற்கொண்ட தொடர்புகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திட்டமிட்டுள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆவது நபராக முகமது இத்ரீஸ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பிராயசித்தம் தேடுவதற்கே அண்ணாமலை நடைபயணம்" - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!