கோவை கவுண்டம்பாளையம், திருச்சி-கோவை சாலை மேம்பாலத்தில் சிங்காநல்லூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சிங்காநல்லூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று சென்றுகொண்டிருந்த ஆனந்த் குமார்(42) என்பவர் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வுமேற்கொண்டார்.
அந்த மேம்பாலத்தில் மேம்பாலம் திறந்த அன்றைய தினமே ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சுங்கம் சந்திப்பு, உக்கடம் வளைவில் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு விபத்துகள் நடைபெறாமல் இருக்க மேம்பாலத்தில் சில தினங்களுக்கு முன் வேகத்தடைகள் அமைக்கப்பட்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் வேகத்தடை அமைக்கப்பட வேண்டிய இடத்தில் அமைக்காமல், வேறு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக இதுகுறித்து பொதுமக்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் கவுண்டம்பாளையம், திருச்சி சாலை சுங்கம் பகுதிகளில் மேம்பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திமுக ஆட்சியில் பணிகள் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து, அதனை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனடாவில் காந்தி சிலை உடைப்பு - நடவடிக்கை எடுக்க இந்தியத் தூதரகம் கோரிக்கை!