'ஒழுங்கா படிக்கலைனா மாடு, ஆடு மேய்க்கத்தான் போவீங்க' என நம் ஆசிரியர்கள் அக்கறையுடன் திட்டியதை நாம் எல்லோரும் கண்டிப்பாக காது குளிர கேட்டு கடந்துதான் வந்திருப்போம். அப்படி ஆசிரியரின் அன்பான சொற்களைக் கேட்டு பொறியியல் வரை படித்துவிட்டு, தனது சொந்த காலில் நிற்க வேண்டுமென நாட்டுக்கோழிகளை வளர்த்துவருகிறார் கொங்கு மண்டல இளைஞர் ஒருவர்.
கோவை மாவட்டம் பசூர் அடுத்த கம்மாள தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்- சகுந்தலா மணி தம்பதியரது மூத்த மகன் கிருஷ்ணமூர்த்தி, கணினி அறிவியல் பொறியியல் முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டுக்கோழி விற்பனையில் இறங்கியுள்ளார். மேலும் வாத்து, முயல், புறா ஆகியவற்றையும் வளர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.
இது குறித்து பட்டதாரி இளைஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “2016ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பிறகு இரண்டு இடங்களில் பணியாற்றிவந்தேன். அங்கு எனக்குப் போதிய வருவாய் இல்லாததால் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என முடிவுசெய்தேன்.
அதன்படி, அழிந்துவரும் நாட்டுக்கோழி இனங்களைப் பல்வேறு சந்தைக்குச் சென்று வாங்கிவந்து வீட்டில் வளர்த்துவந்தேன். பின்னர் அதனை அசைவ உணவகங்களுக்கு விற்பனைசெய்தேன்.
முதலில் மிகக் குறைந்த வருமானம் கிடைத்த நிலையில், தற்போது எனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளதால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அசைவ உணவகங்களுக்குத் தரமான நாட்டுக்கோழி வகைகளை விற்பனை செய்துவருகிறேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த இந்தத் தொழில் தற்போது நல்ல ஒரு வருமானத்தை தருகிறது.
ஆரம்பத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், என்னுடைய விருப்பம் சுய தொழில்செய்வது எனத் தெரிவித்ததை அடுத்து அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். கூலித் தொழிலாளர்களான எனது பெற்றோர் என்னைப் படிக்கவைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என எண்ணியிருந்தனர்.
ஆனால் எனக்குச் சொந்தத் தொழிலில் விருப்பம் என்பதாலேயே என்னுடைய போக்கிலேயே விட்டுவிட்டனர். தற்போது நாட்டுக்கோழி இனங்களில் கடகநாத் கோழி, கிண்ணி கோழி எனப் பலவகை கோழிகளை எங்கள் வீட்டில் வளர்த்துவருகிறேன். விரைவில் வாத்து, புறா, முயல் வளர்க்க முயற்சிகள் எடுத்துவருகிறேன். தற்போது ஊரடங்கு காலத்தில் விற்பனை மந்தமாக இருந்த போதிலும் என்னுடைய வருமானம் குறையவில்லை” என மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
மேலும், படித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ள இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என சோர்வடையாமல் சுயமாகத் தொழில்புரிய இளைஞர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்’ எனும் வள்ளுவனின் வாக்குப்படி நல்ல மகனை பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்ற பொழுதை அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியை அந்த தாய் அடைகிறாள். அப்படி தன் மகன் முதலில் கோழிகளை வளர்க்க ஆர்வம் காட்டும்போது, ஊரார் சொல்லுக்கு ஆளாகி, தற்போது அதே மகனின் வளர்ச்சி கண்டு மகிழ்கின்றனர் கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் தாய் சகுந்தலா மணி கூறுகையில், “நாங்கள் இருவரும் படிக்காத நிலையில் மகனை பொறியியல் படிக்கவைத்து நல்ல பணியில் அமர்த்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். சரியாக வேலை ஏதும் கிடைக்காததால் நாட்டுக்கோழி வளர்ப்பு, விற்பனை செய்யப்போவதாக மகன் கூறியது அதிர்ச்சியை தந்தது. எனினும் அவனுடைய போக்கில் விட்டுவிட்டோம். ஆரம்பத்தில் சாக்குப் பையில் கோழிகளைச் சுமந்துகொண்டு பேருந்தில் பயணித்து கோழிகளை விற்றுவந்தது தங்களுக்கு மிகுந்த வேதனையை தந்தது.
அதுமட்டுமின்றி, பொறியியல் படித்துவிட்டு மகன் கோழி விற்கின்றான் என அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் கூறியது எங்களுக்கு மன வேதனையை தந்தது. இருந்தபோதிலும், கிருஷ்ணமூர்த்தி அந்தத் தொழிலை தற்போது நன்றாக கற்றுக்கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆரம்பத்தில் பேருந்தில் பயணம்செய்த மகன் சொந்த உழைப்பில் இருசக்கர வாகனத்தை வாங்கி தற்போது அந்த வாகனத்தில் சென்று விற்பனை செய்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை விரிவுபடுத்தி நல்ல தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்" எனத் தெரிவித்தார்.
வாழ்க்கையில் என்ன உத்யோகம் பார்க்கிறோம் என்பதைத் தாண்டி நம் மனதுக்குப் பிடித்த வேலையை விரும்பிச் செய்தால் மனநிறைவு மட்டுமின்றி மணியும் (Money) நமக்கு வந்துசேரும் என்பதற்கு கோவை இளைஞர் கிருஷ்ணமூர்த்தியே முன்னுதாரணம்.
இதையும் படிங்க...'சூர்யா கூறியதில் தவறு இல்லை, அவமதிப்பு வழக்கு பதிய வேண்டாம்' - சமூக ஆர்வலர் சரவணன்