கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த அம்சா நகர்ப் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 10 ஆண்டுகளாக வசித்துவருகின்றன. இந்தநிலையில் குடியிருப்புகளைக் காலி செய்யும்படி அலுவலர்கள் மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்துப் பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று (டிசம்பர் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண், "எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் இருக்கிறது. ஆனால் மின்சார வசதி, அடிப்படை வசதி என எதுவும் இல்லை. இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எங்களைக் குடியிருப்புகளிலிருந்து காலிசெய்ய சொல்லி அலுவலர்கள் மிரட்டுகிறார்கள். வேறு இடம் தருவதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த இடம் வனப்பகுதிக்குள் இருப்பதால் நாங்கள் செல்லவில்லை. இந்த இடத்திலேயே இருக்க அனுமதி அளித்து பட்டா வழங்கி உதவ வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.
காவல் துறையினரும், அலுவலர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தப் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: Omicron Test: 'தமிழ்நாட்டில் மரபணு ஆய்வகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்'