தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்ததை ஒட்டி கோவையில் உள்ள தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒரு அறைக்குள் அனைத்து கட்சிகளுக்கும் தலா 3 பூத் மெம்பர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் அங்கு சென்று நேற்று பார்வையிட்ட பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் அங்குள்ள பூத் மெம்பர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பூத் மெம்பர்களுக்கு கழிவறை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை, உணவு வசதிகள் இல்லை அவர்கள் வெளியில் வந்து தேனீர் அருந்திவிட்டு உள்ளே சென்றால் அவர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியுள்ளோம்.
இதற்கு மேலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அங்கு இருக்கக்கூடிய நபர்களுக்கு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகள்தான் காரணம். அவர்கள் இருக்கும் இருப்பிடமும் மிகவும் சிறியதாக உள்ளது. கரோனாவிற்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரசாங்கம் தேர்தல் காலத்தில் இவ்வாறு செய்கிறது என்பது வருத்தமளிக்கிறது. அனைத்து கட்சியினருக்கும் சேர்த்துதான் கூறுகிறேன். அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்” என்றார்.