கோவை : உலகின் மிகவும் தனித்துவமான வனப்பகுதிகளில் ஒன்றாக விளங்கும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினி பூச்சிகள் ஆண்டு தோறும் இரண்டு மாதங்கள் லட்சக்கணக்கில் கூடி ஒளி உமிழும் நிகழ்வுகள் அபூர்வமாக நடைபெறுவது உண்டு.
அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் நடைபெற்றிருந்த நிலையில், அந்த காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அப்புகைப்படங்களில் ஆங்கில திரைப்படமான அவதார் திரைப்படத்தில் வரும் ஒளிச்சிதறல் காட்சிகளை போன்ற புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பொதுவாக சில ஆயிரம் மின்மினி பூச்சிகள் ஒரே நேரத்தில் காடுகளுக்குள் இரவு வேளைகளை ஒளி உமிழ்ந்தபடி பறப்பது வாடிக்கை தான் என்றாலும், லட்சக்கணக்கான பூச்சிகள் ஒரே நேரத்தில் பறந்தபடி, ஒளியை உமிழ்வது ஆச்சரியமான ஒன்று எனவும், இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் வனத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்தை பார்க்கும் போது மஞ்சள் வண்ண விளக்குகளால் காடு அலங்கரிக்கபட்டது போல் காட்சியளித்தது. மரங்கள் மற்றும் செடிகளின் மீது அமர்ந்து மின்மினி பூச்சிகள் வெளிச்சம் கொடுத்ததால் மரங்களில் செடிகளிலும் மஞ்சள் பூக்கள் பூத்தாற் போல தெரிந்தது.
விட்டு விட்டு எரியும் வெளிச்சத்தினால் காட்டின் சித்திரம் இரவுகளில் வேறு ஒன்றாக தெரிந்தது. பச்சையாக காட்சியளித்த காடு இந்த மின்மினி பூச்சிகளின் வெளிச்சங்களால் எரியும் போது மஞ்சளாகவும் அணைந்த போது பச்சையாகவும் தெரிந்ததால் காடே வர்ணஜாலங்களாக வாணவேடிக்கை நிகழ்த்தியது.
மின்மினிப் பூச்சிகளில் ஆண் பூச்சிகளே ஒளியை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை இணையைக் கவர ஒளியை வெளிப்படுத்தினாலும் எதிரிகளை பயமுறுத்தவும் ஒளியை உமிழ்கின்றன. மின்மினிப் பூச்சிகள் வண்டு வகையை சேர்ந்தது. இதில் சுமார் 2,000 வகைகள் உள்ளன. இவை புவியில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.
மின்மினிப் பூச்சிகள் தென்படும் இடங்கள் நீர் மாசுபாடு இல்லாத வளமான உயிர்சூழலுக்கான அறிகுறியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவை வாழ்வதற்கு ஈரப்பதமான சூழ்நிலை மிகவும் அவசியம். ஆதலால்தான் இவை ஆறு, ஏரி, குளம், நீரோடை, வயல்வெளிகள், வனப்பகுதிகள், சதுப்புப் பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
மின்மினிப் பூச்சிகள் தற்போது காணாமல் போவதற்கு முக்கிய காரணம் ஒளி மாசுபாடு. இவை இருளில் ஒளிர்தலைப் பயன்படுத்தியே இணையைக் கவர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. மின்விளக்குகள் போன்ற ஒளிமாசுபாட்டால் இவற்றால் இணையை சரிவர தேர்வு செய்ய முடிவதில்லை. மேலும் இவை வேறு சில உயிரினங்களைப் போல இடம்பெயர்ந்தும் வாழ்வதில்லை.இதனால் தற்போது அடர்ந்த காடுகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன.
இதேபோன்று பாலக்காட்டு கணவாய் பகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலம் நெல்லியம்பதி பகுதியிலும் இந்த மின்மினிப்பூச்சிகள் ஏப்ரல் மே மாதங்களில் லட்சக்கணக்கில் காணப்படும் இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சியாளர் சரவணன் கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் மின் மினிப் பூச்சிகள் வருகின்றன எத்தனை நாட்கள் நிலை நிற்கின்றன எந்தெந்த நாட்களில் மிக அதிகமாக உள்ளன என்பவையெல்லாம் மழை நாட்கள், மிக பலமான மழை நாட்கள் , மிதமான மழை நாட்கள் ஆகியவைகளுடன் மிகத் துல்லியமான தொடர்புடையவை என தெரிவித்தார்.