இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக கோவையைச் சேர்ந்த அசாரூதீன், ஷேக் இதயதுல்லா ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அசாரூதீனிடம் மேற்கொண்ட விசாரணையில், சில ஆவணங்களை குனியமுத்தூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சினோஜிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அசாரூதினை அழைத்துக்கொண்டு, சினோஜ் வீட்டில் சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் இரண்டு கணினி வன்தட்டு (ஹார்ட் டிஸ்க்) உள்ளிட்ட சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அசாருதீன் வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஒரு மணி நேர சோதனைக்கு பின், அசாருதீனை அழைத்துக்கொண்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் கொச்சி திரும்பினர். மேலும் சினோஜ், உக்கடம் பகுதியில் கணினி மையம் ஒன்று நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.