கோயம்புத்தூர்: கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 2022 அக்டோபர் 23 ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில், கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது, 75 கிலோ வெடி மருந்து, சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் உள்ளிட்டோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேசா முபின் ISIS இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜமேசா முபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
அதன் பின்னர் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்டமாக முகமது ஆசாருதீன், முகமது தல்கா, பெரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அப்சர்கான் ஆகிய 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் இவ்வழக்கில் மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ் கான், முகமது தௌபீக், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவருக்கு, இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் கடந்த மாதம் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, ஜமேசா முபின் ISIS இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த கார் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்தியதால் அது குறித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மீண்டும் NIA சோதனை: உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 20க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (செப். 16) அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் GM நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கோவை மாநகராட்சி 82வது வார்டு கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிப்பிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தமீமூன் அன்சாரி வீட்டில் சோதனைக்கு வந்துள்ளனர். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கோவையில் மட்டும் திமுக பெண் கவுன்சிலர் வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: NIA Raid in Covai : கோவையில் என்ஐஏ சோதனை.. காலை முதலே அதிரடி சோதனை!