கோவை: உக்கடத்தில் உள்ள கோட்டைமேட்டு பகுதியில் கடந்த ஆண்டு அக்.23ஆம் தேதி காரில் எடுத்து சென்ற சிலிண்டர் வெடித்தில், காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமீஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமீஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிபொருட்கள், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இந்த நிலையில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தௌபிக், சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து சென்னையில் வைத்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் 6 பேரையும் இன்று காலை கோவை அழைத்து வந்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இவர்களில் சனாபர் அலி, முகமது ரியாஸ், நவாஸ், தௌபிக் ஆகிய 4 பேரை மட்டும் நள்ளிரவு கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபின் இல்லத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையில் நான்கு பேரிடமும் விசாரணையானது நடத்தப்பட்டது.
மேலும் ஜமீஷா முபினின் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்தும் 4 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும்
ஜி.எம்.பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன் அதை வீடியோ பதிவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் உயிரிழப்பு