கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனி பகுதியைச் சேர்ந்த ஜோயல்-ஆரோக்கியமேரி தம்பதியின் மகன் விக்டர் என்கிற நிர்மல். இவர் சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் மனிதவளம் மேம்பாட்டுப் பிரிவு மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.
இவருக்கும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை லியோனி லிடியா மேரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கரோனா பாதிப்பின் காரணமாக ஆடம்பர திருமணங்களுக்குத் தடை உள்ளதால், நேற்று இருவீட்டு உறவினர்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் கலந்துகொண்டு திருமணம் நடைபெற்றது.
ஆடம்பரமாக நடத்தவிருந்த திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை மணமக்களின் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு காலை நேர விருந்தளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களைத் தூய்மைப் பணியாளர்களுக்கு மணமக்கள் வழங்கினர். நிவாரணத்தைப் பெற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
ஆடம்பரச் செலவு செய்வதைத் தவிர்த்து தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மனநிறைவுடன் இருப்பதாகவும் மணமக்கள், அவர்களது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நோ இ-பாஸ்: மாநில எல்லையில் நடந்த சுவாரஸ்ய திருமணம்!