கோயம்புத்தூர்: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு நேற்று நள்ளிரவோடு முடிவடைந்து, 2024 புத்தாண்டு பிறந்தது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகரம் உக்கடம் பகுதியில் அமைந்து உள்ள வாலங்குளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு 12 மணியளவில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் கண்களைக் கவரும் வண்ண வண்ண லேசர் விளக்குகளால் ஒளிரூட்டபட்டது. புத்தாண்டு பிறந்தவுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 250 டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட்டு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு களித்தனர்.
வாலாங்குளம் பாலத்தின் மீது பட்டாசுகள் வரிசையாக வெடித்தது காண்போரை வியக்க வைத்தது. அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனப் பல ஆயிரக்கணக்கான மக்கள், புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். குழுக்களாக வந்த பொதுமக்கள் கேக் வெட்டி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
கோயம்புத்தூர் வாலாங்குளம் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான மக்கள் படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளிநாட்டுப் பறவைகள், நாரை, கொக்கு, பெலிகன் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாக இருக்கும் வாலாங்குளத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் தன்னார்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் களைகட்டிய '2024' புத்தாண்டு கொண்டாட்டம்!