கோவை மாவட்டம், கோவைப்புதூர் அடுத்த அறிவொளி நகர் அருகே குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட மூன்றடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தம் 960 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்த கனமழையால் வீட்டிற்குள் நீர் புகுந்து குடியிருப்புகள் சேதமாகின. அப்போதுதான் தரம் இல்லாத பொருட்களை கொண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் மழைநீர் வடிய போதுமான பைப்புகள் அமைக்காமலும் அரைகுறையாக ஓடுகளை ஒட்டியும் மேல் தளங்களில் உள்ள வீடுகளுக்கு ஜன்னல்கள் அமைக்காமலும் வைத்திருக்கின்றனர்.
இது குறித்து மக்கள் அலுவலர்களிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்திற்கு தயாராகியுள்ளனர். அதையறிந்துவந்த அலுவலர்கள் கண் துடைப்பிற்காக வீட்டின் கூரையில் துளை மூலம் வேதிப்பொருள்கள் செலுத்துவதாகக் கூறி சென்றுள்ளதாகவும் ஏதோ வீடு கொடுக்க வேண்டும் என்ற கடமைக்காகவே கொடுத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.