கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி கலந்துகொண்டார். பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது; இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஏற்கனவே மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் தேர்வாகி வந்த பிறகு மீண்டும் நீட் தேர்வு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் நான்கு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் குறைந்த சதவீதம் பெற்ற மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை. ஒரு திட்டம் கொண்டுவருவது என்பது தவறாக கூறமுடியாது.
ஆனால், அந்தத் திட்டம் கொண்டுவந்த பிறகு அது சரியானதாக இல்லாவிட்டால் அதைத் திரும்ப பெற வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாதபோது, ஒரே மாதிரியான தேர்வு முறை என்பது பொருந்தாது.
நதிநீர் இணைப்பு என்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒரே மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பது சாத்தியமானது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களின் நதிகளை இணைப்பதில் பிரச்னைகள் ஏற்படும். அந்த மாநிலங்களின் ஒப்புதலை பெறவது என்பது சிரமமானது. நிதின் கட்கரி நதிகளை இணைப்பது குறித்து பேசிவருகிறார்.
அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆனால், மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கையை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மொழி உரிமையை பாதுகாக்க நேருவும், இந்திராகாந்தியும் முன்வந்தனர்' என்றார்.