பொள்ளாச்சி அடுத்த குளத்துபாளையம் பகுதியில் இருந்து இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் நாசிலலில் பயன்படுத்தப்படும் கார்பன் பேப்ரிக் தயாரிப்பு தொழிற்சாலையின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குனர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”ராக்கெட் உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் அமெரிக்காவில் இருந்து பலகோடி செலவு செய்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்படுகிறது.
துணி மட்டும்மல்லாது, இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ராக்கெட் உபகரணங்கள் தயாரிப்பதற்கு முன் வருமாயின் பல வகையில் இந்திய பொருளாதாரம் அதிகரிக்கும்.
விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் கிடைக்கவிருந்த 15 நாட்களில் 14 நாட்கள் முடிந்துவிட்டது. இதுவரை விக்ரம் லேண்டரை பற்றிய புகைப்ப்படம் உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மேலும், நாசாவும் எங்களுக்கு லேண்டர் குறித்த எந்த அதிகரப்பூர்வ தகவல்களையும் அனுப்பவில்லை.
சந்திரயான்-2 பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. விரைவில் அதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகள் PSLV C47, 48 மற்றும் GSLV F10 உள்ளிட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதுமட்டுமின்றி, இஸ்ரோ மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:விக்ரம் லேண்டரை கண்டுபிடிப்பதில் சிரமம்... கைவிரித்த நாசா?