ஈஸ்டர் பண்டிகையான ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு காரணமாக சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்வில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் சமூக வலைதளத்தில் தொடர்பு வைத்திருந்ததாக கோவையைச் சேர்ந்த ஏழு நபர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள நேற்று கொச்சி தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கோவை வந்தனர்.
அவர்களுடன் கோவையில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்களும் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் அன்பு நகரில் அசாருதீன், போத்தனுாரில் சதாம் அக்ரம் ஜிந்தா, குனியமுத்துாரில் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட 7 பேர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் ஆறு மாத காலமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் அசாருதீன் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான் ,கரும்புக் கடை ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு முகமது உசேன் ஆகியோர் வீடுகளில் காலை ஆறு மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.