கோயம்புத்தூர்: கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சாகா பயிற்சி தொடர்ந்து எட்டாவது நாளாக நடத்தப்பட்டுவருகிறது. பிராத்மிக் சிக்ஷா வர்க் என்ற பெயரில் நடத்தப்படும் இந்தப் பயிற்சிக்குப் பல்வேறு பெரியாரிய, திராவிட கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
நேற்று (டிசம்பர் 30) தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், பல்வேறு பெரியாரிய கருத்தியல் கொண்ட அமைப்புகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளி முன் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 31) நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதை அறிந்து மேலும் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் பாதுகாப்புப் பணிகள் குறித்து பார்வையிட்டுச் சென்றார். தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றுவருவதால் பள்ளி முன்பாக உள்ள பேக்கரி, மளிகை கடைகள் மூடப்பட்டன.
இதனையடுத்து இன்று நாம் தமிழர் கட்சி மகளிர் அணி பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜகவிற்கு எதிராக முழங்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: powerloom owners go on strike: விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு