கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நெல்லை முத்து விழா நிறுவனத்தின் கிளை நிறுவனமாக முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் - முத்து சிட்பண்ட் என்ற நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. பரமசிவம் என்பவருக்குச் சொந்தமான இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிலம் வாங்குவதற்காக தவணை முறையில் ஏராளமான பணம் கட்டியிருந்தனர்.
வாடிக்கையாளர்கள் முழுமையாக பணம் செலுத்திய நிலையில் முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தினர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது கட்டிய பணத்திற்கு நிலத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இரவு வரை போராட்டம் நீடித்ததால் அங்கு வந்த காவல் துறையினர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கும்படி தெரிவித்தனர்.
இதனையடுத்து, பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை குற்றப்பிரிவு அலுவகத்திற்கு நேரடியாக வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்துசென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாடிக்கையாளர்கள், முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனம் அளித்த வாக்குறுதியை நம்பி ஒவ்வொருவரும் பல லட்சங்களை இழந்துள்ளதாகவும் கடினமாக உழைத்து சம்பாதித்த தங்களுடைய பணத்தை காவல் துறையினர் மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.