கோவை மாநகராட்சியில் முதல்கட்டமாக நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்றக்கூடிய 350 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் 6.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54 தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்.
மேலும் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் சாலை மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "கோவை மாநகராட்சியில் சாலைகளைச் சீரமைக்க 200 கோடி ரூபாய் முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். அந்த நிதிகளைக் கொண்டு முதல்கட்டமாக கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆறு கோடி ரூபாய்க்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் எந்தவிதமான புதுப்பிக்கும் பணிகளும் புனரமைக்கும் பணிகளும் நடைபெறவில்லை. சாலை வசதி, பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் புதுப்பிக்கப்படவில்லை என மக்கள் கோரிக்கைவைத்தனர். அந்தக் கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, தற்போது இந்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மேம்பாலப் பணிகளைப் பொறுத்தவரை நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. யார் வழக்குத் தொடுத்துள்ளார் எனக் கண்டறிந்து அவர்களையும், பாதிக்கக்கூடிய பொதுமக்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அவர்களுடைய மனுக்களுக்கு மதிப்பளிக்காமல் பணிகள் தொடங்கியதால் நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.
செம்மொழி பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அது மட்டுமல்லாமல் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் முதலமைச்சர் இதயத்தில் இடம்பெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் கோவை மாவட்டத்தில் அதிக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மக்கள் சபை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மக்கள் கொடுத்த மனுக்களின் அடிப்படையில் சாலைகள் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிக்க உதவிய சார்பதிவாளர் மீது வழக்கு