கோவை: தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கோவை சின்னியம்பாளையத்திலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தபோது பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரிடப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். மதுரையில், தாமரை சங்கமம் மாநாட்டிலிருந்து இந்தக் கோரிக்கையை பாஜக ஆதரித்துவருகிறது. தற்போது, தேவேந்திர குலவேளாளர் மக்களின் அங்கீகாரம் மீட்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்றுவருகின்றன.
கொங்கு மண்டலத்தில் 12 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் இன்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வருகின்ற 25ஆம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார். பிரமாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டம் அங்கு நடைபெறுகிறது. அரசு விழா நிகழ்வு, பொதுக்கூட்டம் என 2 நிகழ்வில் மோடி பங்கேற்கவிருக்கிறார். பிப்ரவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் ராஜ்நாத்சிங் கலந்துகொள்கிறார்.
பாஜக, அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும், இரட்டை இலக்கத்தில் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள்" என்றார். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்று அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஆதிவாசி மக்களுடன் நடனமாடி அசத்திய எம்.எம்.ஏ ஆறுக்குட்டி