கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (23) காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியார் கடையில் செல்போன், செல்போன்களில் உதிரிபாகங்கள் போன்றவற்றை 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
ஆனால் கூகுள் பே-வில் பணம் கட்டாமல், கட்டியது போல் எடிட்டிங் செய்து அதை ஸ்கிரீன் சாட் எடுத்து கடைக்காரரிடம் காண்பித்துவிட்டு செல்போன், உதிரிபாகங்களை எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் பணம் கடைக்காரரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை. இது குறித்து கடைக்கென உள்ள வாட்ஸ்அப் குழுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் அதே தனியார் கடையின் வேறு கிளைக்குச் சென்று அந்நபர் இதேபோல் செய்துள்ளார். அங்கும் பணம் வராத நிலையில் சந்தேகமடைந்த கடையின் ஊழியர்கள் பணம் தங்கள் வங்கிக் கணக்கில் வரும்வரை சற்று காத்திருங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் தனக்கு நேரமாகிறது என்று விவாதம் செய்துள்ளார்.
அதற்குள் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்து அங்கு விரைந்துவந்த காந்திபுரம் காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் ஸ்கிரீன் சாட் வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் செல்போன் கடைகள் மட்டுமல்லாமல் துணிக்கடைகள், வீட்டு பொருள்கள் வாங்கும் கடைகளிலும் இதுபோன்று மோசடி செய்து அந்தப் பொருள்களை வெளியில் விற்றதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் விஷ்ணுவை சிறையில் அடைத்தனர்.