கோயம்புத்தூர்: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர்கள் இன்று (மே.15) ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசி மையம் ஆகியவற்றை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்களிடம் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது; முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளோம். கடந்த நான்கு நாள்களாக இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து, அதனை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிக்கைகளாக உணவு வழங்கல் துறை அமைச்சர் அனுப்பி வருகிறார்.
இருவரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று (மே.15) ஆய்வு மேற்கொண்டோம். இங்கு 830 படுக்கைகள் உள்ளன. இங்கு மொத்தம் 17,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இம்மருத்துவமனை பொருத்தவரையில் இறப்பு விகிதம் என்பது குறைந்த அளவே உள்ளது. ஆக்ஸிஜனை தேவைக்கேற்ப உபயோகப்படுத்துவதில் சிறந்த மருத்துவமனையாக இ.எஸ்.ஐ மருத்துவமனை திகழ்கிறது.
அதேபோல் கம்போசிசன் என்கிற ஆக்ஸிஜனை குறைந்த அளவு பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் ஒருமுறையை சிறப்பாக செய்தி வருகிறார்கள். இங்கு ஒரு ஆக்சிஜன் பிளாண்ட் ஏற்கனவே உள்ள நிலையில் வருகின்ற காலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மேலும் ஒரு ஆக்சிஜன் பிளாண்ட் தேவைப்படும் என்ற கோரிக்கையையும் இம்மருத்துவமனை முதல்வர் முன்வைத்துள்ளார்.
இம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகின்ற கம்போசிசன் என்ற சிகிச்சை முறையை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மூலம் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கற்று தரும் வகுப்புகளை ஏற்பாடு செய்ய, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆக்சிஜன், ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்!