கோவை மாவட்டம் அவினாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அதிமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் அன்னூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று(டிசம்பர்19) நடைபெற்றது. கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஒரே எதிரி திமுக தான் அதை வீழ்த்த வேண்டும். அதற்காக நிர்வாகிகள் கருத்து வேறுபாடு இல்லாமல் பணியாற்றினால் மட்டுமே எளிதாக வெற்றி பெற முடியும். நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து இத்தேர்தலில் பணியாற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா காலத்தில் நேரடியாக மக்களைச் சந்தித்து கரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். விவசாயிகளும் பொதுமக்களும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட 2500 ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கும்.
திமுக தலைவர் ஸ்டாலின் போன்று ஒரே அறையிலிருந்து அறிக்கை மட்டும் கொடுக்காமல், மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குச் சேவையாற்றி வருபவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி"' எனத் தெரிவித்தார்.