மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது தமிழ்நாட்டில் பலரிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை குரும்பபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்த 15 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மருத்துவ படிப்புக்கான சீருடைகள் மற்றும் இதர உதவிகள் மற்றும் தன் சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகையாக 15 மாணவர்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு பெற்றதுடன், பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்தார். கோவை மாவட்டத்தில் அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் என்றார்.
காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பிற்பகல் மூன்று மணிக்கு மேலே வந்ததால் நிதி உதவிகளை பெற வந்த மாணவர்களும் அப்பகுதியினரும் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு திமுக நிதி உதவி!