கோவை, போத்தனூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 20 ஆண்டு காலமாக வைத்துள்ள கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் 198 பேருக்கு பட்டாவாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
50 ஆண்டு காலமாக இல்லாத வளர்ச்சியை தற்போது கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாகவும் கூறினார். அரசு மருத்துவமனைக்கு பல்வேறு உயர்தர சிகிச்சைகள் கிடைக்க கூடிய வகையில் 6 கோடி ரூபாய்க்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை இருக்காது எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்.