இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒரு பண்டிகையாக மிலாது நபி உள்ளது. இறைத் தூதர் முகமது நபியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இந்த மிலாது நபி விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், இஸ்லாமிய மக்கள் ஊர்வலம் வந்து நபியின் பெருமையை மக்களுக்கு எடுத்து கூறுவது வழக்கம். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடி ஊர்வலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே பல இடங்களில் எளிமையான முறையில் மிலாது நபி கொண்டாப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதி ஜி.எம் நகர் பள்ளிவாசலில் மிலாது நபி கொண்டாடும் விதமாக அதிகாலையிலேயே இறைவனை தொழுது பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள். 50 அடுப்புகளில் 1500 கிலோ குஸ்கா செய்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்து கோவை ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், “ஆண்டுதோறும் மிலாது நபி விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஊர்வலம் சென்று நபியின் பெருமைகளை மக்களுக்கு எடுத்து கூறி உணவு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக , இம்முறை எளிய முறையில் உணவு மட்டும் சமைத்து, அதனை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது “. எனத் தெரிவித்தனர்.