கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் கல்லாறு அருகே உள்ள தூரிப்பாலம் என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று ஆற்றில் தண்ணீர் குடிக்கும் காட்சியை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து பதிவு செய்தனர்.
அதில் அந்த யானை தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமப்படும் காட்சிகள் இடம்பெற்றன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு மேட்டுப்பாளையம் சென்றுள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், கடந்த 24ஆம் தேதி மாலை கல்லாறு ஆற்றில் இந்த யானை தண்ணீர் குடிக்கும் காட்சியை அங்கு உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகருக்கு தகவல் அளிக்கப்பட்டதால் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அந்த யானை சென்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் நடமாட்டத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டு அந்த அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் ஆனைகட்டியில் உள்ள கும்கி யானை கலீம் உடனடியாக மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு கும்கி உதவியுடன் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோவை ஆனைகட்டி பகுதியில் இதேபோன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின்... விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்