கோவையின் சலிவன் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால் கிருஷ்ணசாமி கோயில் வாசலில் நேற்று (மே 29) காலை அடையாளம் தெரியாத நபர் இறைச்சியை வீசி சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் மதம் சார்ந்த வன்முறையை தூண்டும் விதத்தில் பரப்பப்பட்டது.
இதை அறிந்த இந்து அமைப்பினர் அப்பகுதியில் திரண்டு பன்றி இறைச்சியை ஆலய வாசலில் வீசிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால், இரு சமூகங்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் குதித்த இந்து மத அமைப்பை சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி கொடுத்துள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரை கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆணையிட்டிருந்தார்.
தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை வைத்து இந்த சம்பவத்துக்கு காரணமான ஹரி ராம்பிரகாஷ் (48) என்பவரை கைது செய்தனர். வழக்குப் பதிவு செய்து அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும், இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலையின்றி இருந்ததால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : கோயில் முன் பன்றி இறைச்சி வீசியவர்களுக்கு வலைவீச்சு!