கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில் நேற்று காலை அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சோபா (எ) ஸ்ரீமதி என்பவர், க்யூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணைக்காக ஈரோடு மாவட்டத்திற்கு ஸ்ரீமதியைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் பலத்த பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு ஸ்ரீமதி இன்று அழைத்து வரப்பட்டார்.
மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இன்றிலிருந்து வருகின்ற 26ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீமதி கர்நாடக மாநிலம், சிருங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மாவோயிஸ்ட் கட்சிப் பொறுப்பாளராக உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது கர்நாடகம், கேரள மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்சல் சிந்தனைகளைப் பரப்பி, தொடர்ந்து அரசுக்கு எதிராகப் போராடி, வந்த ஸ்ரீமதி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'ஸ்ரீமதிக்குத் தேவையான சட்ட உதவிகளைத் தான் செய்யவிருப்பதாகவும், ஸ்ரீமதி தனக்குப் படிக்கத் தெரியாது' என்று கூறுவதாகவும் தெரிவித்தார். அவருக்கு இலவச சட்ட உதவி செய்ய பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆஜராக இருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் கூறினார்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் தம்பதியர் போலீசில் சரண்!