கோவை: கோவை போத்தனூரை சேர்ந்த 29 வயதான நபருக்கு, திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று(ஜூலை 29) குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, அதன் பிறப்புறுப்பில் ரத்தம் கசிந்ததாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த குழந்தையின் தாயார் அச்சமடைந்தார்.
பின்னர், குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு குழந்தையின் தாயார் அதிர்ச்சியில் உறைந்தார்.
பிறகு இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தையின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து பெற்ற குழந்தையையே பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு, சென்னையை அடுத்த செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். மனைவியும், மகளும் வெளியூர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை மது போதையில் பெற்ற தந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இதனை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். ஒரு நாள் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த தாய் மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது, பெற்ற தந்தையே இந்தப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில், பெரும்பாலான பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை வழக்குகளில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் போன்ற தினசரி பழகக்கூடியவர்கள் தான் குற்றவாளிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ந்த கதை - ஓடும் ரயிலில் சிறுமிக்கு ரயில்வே காவலர் பாலியல் தொல்லை!