இந்தி திரைப்படத்துறையின் பிரபல பின்னணிப் பாடகராக இருப்பவர் அர்மான் மாலிக். அவரது பெயரில் போலியாக முகநூல் பக்கம், ட்விட்டர் கணக்கு ஆகியவற்றைத் தொடங்கிய உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த மகேந்திர வர்மன்(30) இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து, அர்மான் மாலிக்கின் இணையதளத்திலிருந்து 2000க்கும் மேற்பட்ட அவரது புகைப்படங்களையும், வீடியோக்களையும் டவுண்லேட் செய்து, அவற்றை தான் துவங்கிய போலி கணக்கில் பதிவேற்றம் செய்த மகேந்திரவர்மன், தன்னை அர்மான் மாலிக் என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
இதனால், பல இளம்பெண்கள் சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். இந்தி, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் சரளமாகப் பேசும் மகேந்திரவர்மன் பெண்களிடம் பேசி அவர்களின் தனிப்பட்ட ஆபாச/கவர்ச்சிப் புகைப்படங்கள், வீடியோக்களை வாங்கியுள்ளார்.
பின்னர், அந்தப் புகைப்படங்களை வைத்து அப்பெண்களை மிரட்டி அவ்வப்போது பணம், நகை ஆகியவற்றைப் பறித்துள்ளார். பணம் தராவிட்டால் அப்புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளத்தில் பரப்பிவிடுவேன் எனவும் கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றப் பிரிவு ஆய்வாளர் யமுனாதேவி தலைமையில் தனிப்படை அமைத்து மகேந்திரவர்மனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய தனிப்படை காவல் துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களின் உதவியுடன் மகேந்திரவர்மனை கோவைக்கு வரவழைத்துள்ளனர்.
இந்நிலையில், கோவை லட்சுமி மில் அருகே வந்த மகேந்திரவர்மனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மகேந்திரவர்மனிடமிருந்து டேப் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், மகேந்திரவர்மன் மீது மிரட்டிப் பணம் பறித்தல், கொலை மிரட்டல், தொழில்நுட்ப உதவியுடன் அந்தரங்க செயல்பாடுகளில் அத்துமீறல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைதான மகேந்திரவர்மன் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். வேலை கிடைக்காத நிலையில், பின்னணிப் பாடகர் பெயரில் மாநிலம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட வசதியான பெண்களைக் குறிவைத்து அவர்களை ஏமாற்றி பணம்பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகேந்திரவர்மன் காவல் துறையிடம் சிக்கியுள்ள நிலையில், மேலும் பலர் புகார் அளிக்க முன்வர வாய்ப்பு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.