கோவை: அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் மாறுவேடத்தில் கணேசபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரது பெயர் ரவீந்தர பரிடா என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி தனியார் ஆலையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களாக அவர் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே கஞ்சா விதைகளை தூவி கஞ்சா செடி வளர்த்து வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்ததில் சுமார் மூன்று மாதமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டதில் தான் பணிபுரிந்த வந்த நிறுவனத்தில் வேலை இல்லாததால் கஞ்சா விற்பனை செய்ததாகவும் தனக்கு தெரிந்த நபரிடம் விதைகளை வாங்கி கஞ்சா செடி பயிரிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரவழி மாதப்பூர் என்ற இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர்கள் ரஃபியூல் இஸ்லாம், சத்குமார் சேட், சரத் தண்டியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:ஐ.எப்.எஸ். நிதிநிறுவன ஆடிட்டர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை