கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட நாயக்கன்பாளையம் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடாகம் காப்புக்காடு புளியந்தோப்பு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டபோது யானை ஒன்று இறந்தது கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனினும் இரவு நேரத்தை நெருங்கியதாலும், அங்கு மற்ற யானை கூட்டம் இருந்ததாலும், வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று காலை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் இந்த யானை இறந்தது 20 நாட்களுக்கு மேல் ஆனதால் மற்ற ஊனுண்ணிகள் அதனை சாப்பிட்டதும் தெரியவந்தது. பின்னர் வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “ யானையின் இறப்பு குறித்து பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும். மேலும் யானையின் இறப்பிற்கான காரணத்தை அறிய ஆய்வகத்துக்கு யானையின் சில உறுப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது முடிவில் தெரியும்” எனக் கூறினர்.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் சிறுமுகை வனச்சரகத்தில் மூன்று யானைகளும், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் இரண்டு யானைகளும், போளுவாம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில் தலா ஒரு யானைகள் என மொத்தம் எட்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்!