கோவையில் ஐந்தாம் கட்ட பரப்புரையை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மசக்காளிப்பாளையத்தில் துவங்கினார்.
அப்போது மக்களிடம் பேசிய கமல், "என் மீது நீங்கள் வைத்திருப்பது அன்பு மட்டுமல்ல நம்பிக்கையும் கூட. புதிய மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. அதன் அடையாளமாக தாய்மார்களின் ஆசி கைகள் உயர்கின்றன. நடிகருக்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்று பலரும் எண்ணுகின்றனர், அது இல்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். உங்களுடைய தயவினால்தான் நான் சினிமாவில் நட்சத்திரமானேன். இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும் சிரு விளக்காக மாறுவதற்கு ஆசைப்படுகிறேன். அந்த விளக்கை நீங்களே ஏற்றி வையுங்கள்.

இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் என்ற திட்டத்தை ஆசியாவின் வேறு எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று கூறியபோது கொக்கரித்து சிரித்தவர்கள் எல்லாம் தற்போது ஓய்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் வேலை தேடி அலையும் தொழிலாளர்களாக இல்லாமல் வேலை தரும் முதலாளிகளாக மாற திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். ஒவ்வொரு வீடுகளுக்கும் கணினி வழங்கப்படுவது இலவசம் அல்ல. கணினி என்பது நீங்களும் நானும் உரையாடும் கருவி. ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே" என தெரிவித்தார்