கோயம்புத்தூர்: கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான கிறிஸ்துமஸ் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் கேக் என்பது முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிளம் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி அவ்விடுதி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைமை செஃப் ராஜா தலைமையில் விடுதியின் சமையல் நிபுணர்கள் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேஜையில் முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம் , பாதாம், வால்நட், மற்றும் உலர் பழ வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவை தனித்தனியே வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு திரண்டிருந்த பெண்கள் அந்த உலர் பழங்களின் மீது ரம், விஸ்கி, பிராந்தி, ஜின், பீர், ஒயின் என பல வகையான மதுபானங்களை ஊற்றி நன்றாக கலந்தனர்.
இந்த கலவை வருகிற 60 நாட்களுக்கு பதப்படுத்தப்பட்டு சுமார் 200 கிலோ எடையிலான கேக் தயாரிக்கப்படும் எனவும்; மதுபானங்களில் உலர் பழங்கள் நன்றாக ஊறும் பட்சத்தில் சுவையான பிளம் கேக் தயாராகும் எனவும்; அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும்; தயாரிப்புப்பணியில் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மார்ட்டின் குழுமங்களின் இயக்குநர் லீமா ரோஸ் மார்ட்டின் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: பனிமய மாதா பேராலயம் தங்கத்தேர் திருவிழா