கோயம்புத்தூர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து பென்சில் செய்வதற்கான மரப்பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை பிகாரைச் சேர்ந்த ஓட்டுநரான அன்சாரி பெரோஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். அவருடன் கிளீனராக அவரது உறவினர் நகீம் என்பவரும் சென்றுள்ளார்.
சேலத்தைத் தாண்டி லாரி சென்றபோது இருவரும் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தியதாகத் தெரிகிறது. அப்போது மது அருந்திய ஓட்டுநர் பெரோஜ், அங்கேயே சிறிது நேரம் உறங்கியுள்ளார். இந்நிலையில் ஓட்டுநர் பேரோஜை அங்கேயே விட்டுவிட்டு கிளீனர் நகீம் லாரியை எடுத்துக் கொண்டு கோவை நோக்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நகீம் ஓட்டிவந்த லாரி கணியூர் சுங்கச் சாவடியில் நிற்காமல் தடுப்புகளில் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், நிறுத்தாமல் தொடர்ந்து லாரியை இயக்கி நீலாம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது மோதினார். இதையடுத்து பேருந்திலிருந்து இறங்கிய பயணிகள் லாரியை ஓட்டிவந்த நகீமை மடக்கிப் பிடித்தனர்.
விபத்திற்குப் பேய்தான் காரணம்
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், கிளீனரை லாரியுடன் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், தனது உடலில் பேய் புகுந்துகொண்டதால் இவ்வாறு நடந்துகொண்டதாகவும், அடிக்கடி அந்தப் பேய் தனது உடம்பில் புகுந்து கொள்கிறது, இதற்கெல்லாம் காரணம் அந்தப் பேய்தான் தனக்கு ஒன்றும் தெரியாது என ‘அந்நியன் விக்ரம்’ போல பேசியுள்ளார்.
இதனைக் கேட்டு கடுப்பான காவல் துறையினர், பெரோஜை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மது அருந்திய நகீம், குடிபோதையில் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் எச்சரித்த காவல் துறையினர், அபராதம் மட்டும் விதித்து அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் இளைஞர் தீக்குளிப்பு: காவலர்கள் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு