கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, நாட்டில் போக்குவரத்து, தொழில் நிலையங்கள் முடக்கப்பட்டு மக்களி்ன் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே இயங்கி வருவதால் பொதுமக்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால் மக்கள் நாட்டு நடப்புகளை அறிய தொலைக்காட்சிகளைக் பயன்படுத்தினாலும், தங்கள் பகுதிகளைச் சுற்றி நிகழும் சம்பவங்களை அறிவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி மக்களுக்கு உள்ளூர் வானொலி எனப்படும் சமுதாய வானொலி பெரிதும் உதவுகிறது.
கோவையை பொறுத்தவரை இரண்டு சமுதாய வானொலிகள் உள்ளன. இதில் தனியார் குழுமம் சார்பில் இயங்கி வரும் சமுதாய வானொலி நகரில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறது.
இதில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு அறிவித்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே, நகரில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்களுக்குத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இவர்கள், மக்களின் அவசர காலத் தேவைகள், மருத்துவ உதவிகளுக்கான தொடர்பு எண்கள், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் சமுதாய வானொலி ஒளிபரப்பு துறைத் தலைவர் சுதாகர் கூறுகையில், கரோனா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அத்தியாவசிய தேவைகள் கிடைக்கும் பொது இடங்கள், திருமண உதவிகளுக்காக அரசினை அணுகும் முறை, உணவு தேவைகளுக்கான உதவி எண்கள் குறித்து மக்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறோம்.
ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும் நோக்கில் இந்த சமுதாய வானொலி செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிர்கொள்ளும் அரசின் அவசரக்கால திட்டம் என்ன?