கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் உள்ள மலையடிவார கிராமங்களில் கடந்த இரு வார காலமாகவே சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சம்மரவள்ளிபுதூர், பெரிய தோட்டம், பெத்திக்குட்டை, கோவில்மேடு,தேங்கல்கரடு ஆகிய கிராமங்கள் வனத்தையொட்டியுள்ள மலையடிவாரத்தில் உள்ளன.
இங்கு இரவு நேரத்தில் நுழையும் சிறுத்தைகள் அங்குள்ள தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடு,மாடுகளை உணவுக்காக கொன்று விடுகின்றன. மேலும், இரவு நேரங்களை போல் பகல் நேரத்திலும் சுற்றித்திரிய ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து கிராம மக்கள் புகார் அளித்ததையடுத்து, சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து கூண்டுகளை வைத்தனர். மேலும் , சிறுத்தையை வரவைக்க கூண்டுக்குள் நாய்களை கட்டி வைத்தனர். ஆனால், கூண்டு வைத்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தைகள் சிக்கவில்லை. இதனால், மக்கள் வெளியே நடமாடுவதற்கே மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, சிறுத்தைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கூண்டுகள் வைத்தும் சிறுத்தைகள் அதனுள் நுழையாமல் இருப்பதால் அவற்றை பிடிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறினர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க வந்தவரின் செல்போன் திருட்டு